இந்தியா எனக்கு இரண்டாவது வீடு.. உயர்ந்த பண்புகளை எல்லாம் இந்தியாவில் கற்றுக்கொண்டேன்!! ரஷீத் கான் நெகிழ்ச்சி

First Published Jun 19, 2018, 1:16 PM IST
Highlights
india is my second home said rashid khan


அன்பையும் உபசரிப்பையும் இந்தியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாக ரஷீத் கான் நெகிழ்ந்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான், 19 வயதே ஆன இளம் வீரர். இந்த இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகில் சாதனைகளை குவிப்பதோடு, பல ஜாம்பவான்களின் பாராட்டுகளையும் வாரி குவித்துள்ளார். 

ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், ஸ்பின் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தினார். தான் ஆடும் அணியின் வெற்றிக்காக 100% அர்ப்பணிப்புடன் ஆடுகிறார் ரஷீத் கான். ரஷீத் கானின் திறமையை விட, அவரது அர்ப்பணிப்பான ஆட்டம் தான் அவரது மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் மூலம், இந்தியாவில் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார். அதிகமான இந்திய ரசிகர்களை பெற்றுள்ள வெளிநாட்டு வீரராக டிவில்லியர்ஸ் திகழ்கிறார். டிவில்லியர்ஸுக்கு அடுத்து அப்படியான இந்திய ரசிகர்களின் பேராதரவை பெற்றவராக ரஷீத் கான் இருக்கிறார். 

ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை டுவிட்டரில் வலியுறுத்தும் அளவிற்கான தீவிர ரசிகர்களை ரஷீத் கான் பெற்றுள்ளார். 

பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஷீத் கான், இந்திய ரசிகர்களின் பேராதரவை நினைத்து நெகிழ்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ரஷீத் கான், இந்திய ரசிகர்களின் ஆதரவை வெளிநாட்டு வீரர் ஒருவர் பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் எனக்கு இந்திய மக்களிடம் இருந்து அளவு கடந்த அன்பு கிடைக்கிறது. என் மீது மிகவும் பாசமாக உள்ளார்கள். அதனால் தான் இந்தியாவிற்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியா எனக்கு இரண்டாவது வீடு. அன்பையும் உபசரிப்பையும் நான் இங்குதான் கற்றுக்கொண்டேன். 

டேராடூனில் ஒரு ஹோட்டலில் இருந்தபோது, ஒரு சிறுவன் ஓடிவந்து என்னை கட்டி அணைத்து கொண்டான். ஒரு மலைப்பகுதியில் வாழும் சிறுவனுக்கு கூட என்னை தெரிந்திருப்பதை நினைத்து வியந்து போனேன். அப்போதுதான் இந்திய ரசிகர்களின் மனதில் எனக்கென ஒரு இடம் இருப்பதை அறிந்தேன். இந்தியாவில் எனக்கு கிடைக்கும் ஆதரவு வியப்பை ஏற்படுத்தியது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார். 
 

click me!