டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஏமாற்றம் – நிரஞ்சனா நாகராஜன்!

By Rsiva kumar  |  First Published May 4, 2024, 1:19 PM IST

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறாதது ஏமாற்றம்தான் என்றும், இதில் இடம் பெறாவிட்டாலும் விரைவில் அவர் மிகப்பெரிய எழுச்சி பெறுவார் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற உள்ளது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி தொடரின் இறுதி போட்டிகள் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.

முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற துவக்க விழாவில் போட்டி தொடரின் ஒருங்கிணைப்பாளர்களான லீமா ரோஸ் மார்ட்டின், வின்னர்ஸ் இந்தியா கண்ணன், லிஜோ சுங்கத் உள்ளிட்ட பலர் பங்கேற்று வீரர்களுக்கு உற்சாக மூட்டினர். முன்னதாக விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், சிபிஎல் கோவை போட்டி தொடர் சிறப்பாக துவங்கி உள்ளதாகவும் எந்த அளவுக்கு இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெறுகிறதோ இந்திய கிரிக்கெட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட்டு வருவதாகவும் இப்போது மகளிர் கிரிக்கெட் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கமளித்து வருவதாகவும் விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்  நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான் என்றும் கண்டிப்பாக நடராஜன் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெறாவிட்டாலும் அவர் விரைவில் பெரிய அளவில் எழுச்சி பெறுவார் என்றும் அவரது யார்க்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

click me!