இமாலய இலக்கை விரட்டும் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறல்!! வெற்றி பாதையில் இந்தியா

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 9:45 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடிவருகிறது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடிவருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம் மற்றும் மயன்க், கோலி, ரோஹித் சர்மாவின் அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் பும்ராவின் வேகத்தில் சரிந்தது. பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, அவரிடம் மட்டுமே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 67 ஓவர்கள் மட்டுமே ஆடி 151 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. 

292 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்கு எதிர்மாறாக பேட்டிங் ஆடியது. விஹாரி 13 ரன்களில் வெளியேற, புஜாரா மற்றும் கோலி டக் அவுட்டாகினர். ரஹானே(1), ரோஹித்(5) ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும் மயன்க், ஜடேஜா, பண்ட் ஆகியோர் ஆட்டமிழக்க, 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 399 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் முறையே 3 மற்றும் 14 ரன்களில் ஜடேஜா மற்றும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 33 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. 33 ரன்களில் கவாஜாவை ஷமி வீழ்த்தினார். களத்தில் நிலைத்து நின்று அரைசதத்தை நெருங்கிய ஷான் மார்ஷை 44 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். 

இவரைத்தொடர்ந்து மிட்செல் மார்ஷை 10 ரன்களில் ஜடேஜா பெவிலியனுக்கு அனுப்ப, ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாள் டீ பிரேக் வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து தோல்வியில் விளிம்பில் உள்ளது. 

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால், இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் உள்ளது. இன்றைய நாளின் கடைசி செசனுடன் போட்டி முடிந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 
 

click me!