ஒரு பந்து இல்லப்பா.. ஒவ்வொரு பந்துலயுமே பேட்ஸ்மேனை மிரட்டுறாரு!! பும்ராவை புகழ்ந்து தள்ளிய முன்னாள் ஸ்பீடு பவுலர்

By karthikeyan VFirst Published Dec 28, 2018, 5:45 PM IST
Highlights

பும்ரா ஒவ்வொரு பந்தையுமே மிரட்டலாக வீசுவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

பும்ரா ஒவ்வொரு பந்தையுமே மிரட்டலாக வீசுவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 292 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை தனது வேகத்தில் திக்கு முக்காட வைத்து சரித்தார் பும்ரா. மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

வீசும் ஒவ்வொரு பந்திலுமே வெரைட்டி காட்டும் பும்ரா, ஷான் மார்ஷுக்கு வீசிய துல்லியமான ஸ்லோ யார்க்கர் உச்சகட்ட மிரட்டல். அந்த பந்தில் அவுட்டானதும் அதிர்ந்துபோன ஷான் மார்ஷ் சில நொடிகள் திகைத்துப்போய் நின்றார். 

மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் நாயகனான பும்ராவின் பவுலிங் குறித்து முன்னாள் பவுலர் ஸ்ரீநாத் மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் பேசிய ஸ்ரீநாத், என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் வீசப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சுகளில் இதுவும் ஒன்று. பும்ராவின் பந்துவீச்சை ஆடுவது கடினம். ஏதாவது ஒரு பந்தை மட்டுமல்ல, ஒவ்வொரு பந்தையுமே பேட்ஸ்மேனை மிரட்டும் வகையிலேயே வீசுகிறார் பும்ரா. அவர் வீசும் வேகமும் ஒவ்வொரு பந்துக்கும் காட்டும் வெரைட்டியும் வியப்பை ஏற்படுத்துகிறது என்று பும்ராவை ஸ்ரீநாத் புகழ்ந்து தள்ளினார். 
 

click me!