டென்னிஸில் இரட்டையர் பிரிவில் ரோகன் போபன்னா - என் ஸ்ரீராம் பாலாஜி ஜோடியும், ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும் தோல்வி அடைந்து பதக்கமே இல்லமல் வெளியேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், கோல்ஃப், ஹாக்கி, ஜூடோ, ரோவிங், படகுப்போட்டி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் என்று 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரையில் இந்தியா ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இதே போன்று மற்றொரு போட்டியில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து வெளியேறினார். என்னும், துப்பாக்கி சுடுதலில் இந்தியா இன்னும் பல போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்தியா டென்னிஸ் மற்றும் நீச்சல் என்று 2 போட்டிகளை முற்றிலுமாக முடித்துள்ளது.
இதில், நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் ஆண்களுக்கான 100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீஹரி நடராஜ் 55.01 நிமிடங்களில் இலக்கை அடைந்து 33ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதே போன்று மகளிருக்கான 200மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் திநிதி தேசிங்கு 2:06.96 நிமிடங்களில் இலக்கை கடந்து 23ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
இதே போன்று டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் போட்டியிட்டார். இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோரேன்டின் மௌடெத்தை எதிர்கொண்டார். முதல் செட்டை 2-6 என்று இழந்த நாகல், 2ஆவது செட்டை 6-2 என்று கைப்பற்றிய நிலையில் 3ஆவது செட்டை 5-7 என்று இழந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி ஜோடியானது பிரான்ஸ் நாட்டு ஜோடியிடம் 5-7 மற்றும் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் மூலமாக இந்திய அணி நீச்சல் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்களை இழந்து வெளியேறியுள்ளது.