ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து வெளியேறியுள்ளார். மேலும், வெண்கலப் பதக்கத்தையும் நழுவவிட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 3ஆவது நாளான இன்று ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், தகுதிச் சுற்று போட்டியில் 60 ஷாட்டுகளில் 630.1 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்த இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பதக்கத்திற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் அர்ஜூன் பாபிதா 208.4 புள்ளிகள் பெற்று 4ஆவது இடம் பிடித்து வெளியேறியுள்ளார்.
undefined
கடைசி ஷாட்டில் 9.5 புள்ளிகள் பெற்ற நிலையில் டாப் 3ல் இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். எனினும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று மகளிருக்கான மற்றொரு போட்டியில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
அதுமட்டுமின்றி கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று 3ஆவது ஜோடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டி போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.