பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், அனைவருக்கும் இலவச விசா வழங்குவதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவைச் சேர்ந்த விசா ஸ்டார்ட்அப் அட்லிஸின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மோஹக் நஹ்தா உறுதி அளித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்கலை வென்று பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றால், அனைவருக்கும் இலவச விசா வழங்குவதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விசா ஸ்டார்ட் அப் அட்லிஸின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மோஹக் நஹ்தா உறுதி அளித்துள்ளார்.
சமூக வலைதளமான லிங்க்டு இன் பதிவு மூலமாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், உலகம் முழுவதும் உள்ள Atlys பயனாளர்களுக்கு ஒருநாள் முழுவதும் இலவச விசா வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் மட்டும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றிவிட்டால் என்னுடைய தனிப்பட்ட முறையில் நான் அனைவருக்கும் இலவச விசாவை அனுப்புவேன் என்று லிங்க்டு இன்னில் பதிவிட்டுள்ளார்.
இது அனைத்து நாட்டவருக்கும் பொருந்தும். மேலும், இது அட்லிஸ் பயனாளர்கள் எந்த செலவும் இல்லாமல் விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. எந்த மாதிரியான சலுகை என்பதை தெளிவாகவும் கூறியுள்ளார். அதில், சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், ஆகஸ்ட் 8ஆம் தேதி இலவச விசா நாள் நடைபெறும். அனைவருக்கும் விசா இலவசம். பயனர்கள் எந்த நாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ளலாம்.
இலவச விசாவிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கமெண்ட் செக்சனில் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மோஹத் நஹ்தாவின் இந்த பதிவிற்கு பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதில், சோப்ரா எப்படியாவது தங்கப் பதக்கம் ஜெயித்துவிடுங்கள். நான், இந்த நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டும், அந்த நாட்டிற்கு டிராவல் பண்ண வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் போட்டி வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், கிஷோர் ஜெனா என்ற மற்றொரு வீரரும் பங்கேற்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா மட்டுமே இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.