பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த ஆர்சிபி!! ஹைதராபாத்தின் அபார பவுலிங்கில் வீழ்ந்த பெங்களூரு

First Published May 8, 2018, 9:38 AM IST
Highlights
hyderabad defeats kohli lead rcb


ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துவிட்டது.

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு அணி நேற்று மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

ஹைதராபாத் அணியில் ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ், மனீஷ் பாண்டே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ஷாகிப் அல் ஹாசன் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.

வில்லியம்சன் 56 ரன்களும் ஷாகிப் அல் ஹாசன் 36 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதையடுத்து களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கோலி மட்டும் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. கடைசி வரை போராடிய கோலின் டி கிராண்ட்ஹோம் 33 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரால் இலக்கை எட்டமுடியவில்லை. ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கௌல், ஷாகிப், ரஷீத் கான் ஆகியோர் ரன்களை நன்கு கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இவர்களின் பந்துவீச்சை பெங்களூரு அணியால் சமாளித்து இலக்கை எட்டமுடியவில்லை.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஹைதராபாத் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் தோற்றதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துவிட்டது. 10 போட்டிகளில் 3ல் வெற்றியுடன் அந்த அணி 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 16 புள்ளிகளை பெற வேண்டும். எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட பெங்களூரு அணியால் 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால், இந்த முறை பெங்களூரு அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டது.
 

click me!