பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடருக்காக தயாரிக்கப்பட்ட ஒரு கோடி டிக்கெட்டுகளில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸீல் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா செய்ன் நதிக்கரையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு 162 படகுகளில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
undefined
இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். கலைநிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், சாகச நிகழ்ச்சிகள் என்று பிரம்மாண்டமாக இந்த தொடக்க விழா நடைபெற்றது.
இதையடுத்து தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் தொடரின் முதல் போட்டியான 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட இந்திய ஜோடியான ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பாபுதா ஜோடி 6ஆவது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று சஞ்சீவ் சிங் மற்றும் இளவேனில் வளரிவன் ஜோடி 12ஆவது இடம் பிடித்து வெளியேறியது.
இதே போன்ற் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்களான சரப்ஜோத் சிங் 9ஆவது இடமும், அர்ஜூன் சிங் சீமா 18ஆவத் இடமும் பிடித்து இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளனர். தற்போது மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் முதல் பதக்கத்தை கஜகஸ்தான் நாடு கைப்பற்றியது. 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் வெற்றி பெற்று முதல் வெண்கல பதக்கத்தை வென்றது. என்னதான் முதல் பதக்கத்தை கஜகஸ்தான் வென்றாலும் சீனா தான் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
சாட்டௌரோக்ஸில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவு இறுதிப் போட்டியில் சீனா கொரியாவை 16-12 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் 2024 தொடரின் முதல் பதக்கத்தை கைப்பற்றியது. இதே போன்று மகளிருக்கான 3மீ ஸ்பிரிங்போர்டு பிரிவில் 2ஆவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் 2 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தான் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காக தயாரிக்கப்பட்ட ஒரு கோடி டிக்கெட்டுகளில் இதுவரையில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் விற்பனை செய்யப்பட்ட 83 லட்சம் டிக்கெட்டுகளை காட்டிலும் 14 லட்சம் டிக்கெட்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.