பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 8ஆவது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 7 நாட்கள் முடிவில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 49ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதில், ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் மகளிருக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது.
undefined
கடைசியாக 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிங் இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதே போன்று மற்றொரு போட்டியில் வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
முதலில் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று எலிமினேட்டர் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து எலிமினேட்டர் சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு சென்றார். ஆனால், மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தென் கொரியாவைச் சேர்ந்த நம் சூ-ஹியோனிடம் 4-6 என்று தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதன் மூலமாக வில்வித்தையில் போட்டியிட்ட தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் ஆகிய வீரர்கள் ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் மற்றும் குழு போட்டியில் தோல்வி அடைந்து ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறினர். இதே போன்று மகளிருக்கான தனிநபர் போட்டியில் பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் தோல்வி அடைந்து பதக்கம் கூட இல்லாமல் வெளியேறினார். மேலும் குழு போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கலப்பு இரட்டையர் பிரிவிலும் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.