இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா வகுத்த வியூகம்!! முறியடித்த இந்தியா

First Published May 8, 2018, 4:08 PM IST
Highlights
cricket australia accepted bcci request


அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கைவிட்டுள்ளது. 

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட உள்ளது. இதில், அடிலெய்டில் நடக்கும் டெஸ்ட் போட்டியை மட்டும் பகலிரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. 

ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் தலைமை நிர்வாகியான வினோத் ராய், இந்தியா பகலிரவு டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக குறைந்தது ஓராண்டு காலம் ஆகும் என்பதால், ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வழக்கமான முறையில் நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வழக்கமான முறையில் நடத்த ஒப்புக்கொண்டது. 

2014-க்குப் பிறகு முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக இல்லாமல் வழக்கமான முறையில் அடிலெய்டில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்ற 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வகுத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 

click me!