பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற 6ஆவது நாள் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் குசலேவிற்கு மகாராஷ்டிரா முதல்வர் ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் 33ஆவது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர், வீராங்கனைகள் பலரும் தோல்வி அடைந்து வெளியேறி வருகின்றனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் 3 வெண்கலப் பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் தற்போது 42ஆவது இடத்தில் உள்ளது. மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தது.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 50மீ ஏர் பிஸ்டல் 3பி பிரிவில் இந்திய வீரர் 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். மேலும், 50மீ ஏர் பிஸ்டல் 3பி பிரிவில் இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் குசலேவிற்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி கோல்ஹபூர் பகுதியில் வசித்து வரும் குசலேவின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களது குடும்பத்திற்கும், ஸ்வப்னில் குசலேவின் எதிர்கலாத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று கூறியுள்ளார்.
தோனியைப் போன்று டிக்கெட் செக்கர் வேலை; இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் சிங்!
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் குசலே. தனது 13 வயது முதலே துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 50மீ ரைபிள் ப்ரோன் 3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். கேரளாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதே பிரிவில் விளையாடி தங்கப் பதக்கம் வென்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் பிரிஸ்பேனில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பிய்ன்ஷிப் போட்டியில் 50மீ ரைபிள் ப்ரோன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில், 50மீ ரைபிள் 3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 2022 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடத்தப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.