போயிருக்க வேண்டியதோ 5.. ஆனால் போனதோ 3.. முதல் டெஸ்ட்டில் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் செம அதிர்ச்சியளித்த கோலி

By karthikeyan VFirst Published Nov 14, 2019, 12:13 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளின் முதல் செசனிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டது இந்திய அணி.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. இஷாந்த், ஷமி, உமேஷ் ஆகிய மூன்று ஃபாஸ்ட் பவுலர்களுமே அணியில் உள்ளனர். 

காலை 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாமும் இம்ருல் கைஸும் களமிறங்கினர். இருவரும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக மிகக்கவனமாகவும் நிதானமாகவும் இந்திய பவுலர்களை எதிர்கொண்டனர். ஆனாலும் ஆறாவது ஓவரில் இம்ருல் கைஸை உமேஷ் யாதவ் வீழ்த்திவிட்டார். இதையடுத்து அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாமை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். 

தொடக்க வீரர்கள் இருவருமே தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மோமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த முகமது மிதுன், நிதானமாக ஆடிக்கொண்டிருக்க, அவரை 13 ரன்களில் வீழ்த்தினார் ஷமி. 

18வது ஓவரில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹக்குடன் அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். மோமினுல் ஹக்கிற்கு அஷ்வின் வீசிய பந்தில் ஒரு கடினமான கேட்ச்சை தீவிர முயற்சி செய்து கோட்டைவிட்டார் ரஹானே. ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 24வது ஓவரின் முதல் பந்தில் முஷ்ஃபிகுர் ரஹீம் கொடுத்த எளிமையான கேட்ச்சை மூன்றாவது ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி கோட்டைவிட்டார். விராட் கோலி பெரும்பாலும் இதுமாதிரியான தவறுகளை செய்யமாட்டார். அரிதினும் அரிதாக சில கேட்ச்களை விடுவார். ஆனால் இந்தளவிற்கு எளிமையான கேட்ச்சை கோலி கோட்டைவிட்டது பெரிய ஆச்சரியம்தான். அந்தளவிற்கு கை மேல் வந்த கேட்ச்சை விட்டுவிட்டார். உமேஷ் யாதவ் அதனால் கடும் அதிருப்தியடைந்தார். 

முதல் நாளான இன்றைய ஆட்டத்தின்  உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் அடித்துள்ளது. தற்போது களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களின் கேட்ச்சையுமே நமது வீரர்கள் தவறவிட்டுவிட்டனர். இல்லையெனில் இந்நேரம் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்திருக்கும்.

click me!