பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட் பிரிவில் 5ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலமாக இந்தப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் முடிவில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதில், இந்தியா நீச்சல், ரோவிங், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, குதிரையேற்றம், படகு போட்டி ஆகிய விளையாட்டுகளில் தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த நிலையில் தான் 10ஆவது நாளான நேற்று ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவினாஷ் முக்ந்த் சேபிள் பங்கேற்றார். இதில் அவினாஷ் சேபிள் 8:15.43 வினாடிகளில் 5ஆவது வீரராக இலக்கை கடந்தார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் அவர் தோல்வி அடைந்திருந்தால், ரீபிசேஞ் என்று சொல்லப்படும் 2ஆவது வாய்ப்பிற்கான போட்டியில் பங்கேற்கும் நிலை இருந்தது.
அதோடு, இந்த ரீபிசேஞ் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையும், இல்லையென்றால், எலிமினேட் செய்யப்படும் நிலையும் இருந்தது. ஆனால், அவினாஷ் சேபிள் 5ஆவது இடம் பிடித்ததன் மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மொராக்கோவைச் சேர்ந்த முகமது டின்டூஃப்ட் 8:10.62 வினாடிகளில் இலக்கை கடந்த முதல் வீரராக இறுதிப் போட்டிக்கு சென்றார்.
இதையும் படியுங்கள்... Paris 2024:கடைசியில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி – பேட்மிண்டனில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய இந்தியா!
இவரைத் தொடர்ந்து, எத்தியோபியா நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஃபயர்வு 8:11:61 வினாடிகளில் இலக்கை கடந்து 2ஆவது வீரராக இறுதிப் போட்டிக்கு சென்றார். மேலும், கென்யா மற்றும் ஜப்பான் வீரர்கள் அடுத்தடுத்து இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு சென்றனர். அவினாஷ் சேபிள் 5ஆவது இடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றார். இதன் மூலமாக 3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை சேபிள் படைத்துள்ளார். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்... கையில் காயம் – வலியோடு விளையாடி தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா – கண்ணீர்விட்டு அழுத காட்சி!
இதற்கு முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 8ஆவது இடம் பிடித்து வெளியேறினார். அதோடு, அங்கிதா தியானி 5000மீ தடகளப் போட்டியில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.