ஆண்ட்ரே ரசலின் காட்டடியில் சிக்கி சீரழிந்த எதிரணி!!

By karthikeyan VFirst Published Aug 11, 2018, 5:07 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டி ஒன்றில், அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல், 49 பந்துகளில் 121 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். 

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலைமையிலான ஜமைக்கா டலாவாஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற ஜமைக்கா அணி பவுலிங் தேர்வு செய்ததால், டிரின்பாகோ அணி முதலில் பேட்டிங் ஆடியது. கிறிஸ் லின், கோலின் முன்ரோ, பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்களை குவித்தது. லின் 46 ரன்களும் முன்ரோ 61 ரன்களும் மெக்கல்லம் 56 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 224 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா அணியின் தொடக்க வீரர் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆண்ட்ரே மெக்கார்த்தி(0), ரோஸ் டெய்லர்(1), ரோவ்மன் பவல்(1) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 16 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. 

ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஜமைக்கா அணி இழந்தது. எனினும் அதன்பிறகு அந்த அணியின் கேப்டன் ரசல் மற்றும் கென்னார் லெவிஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி அணியை மீட்டனர். எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரசல், சதமடித்தார். லெவிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் விக்கெட்டையும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியாகவும் ஆடிய ரசல், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து அணியையும் வெற்றி பெற செய்தார். 

ரசலின் அதிரடியால் 19.3 ஓவரில் ஜமைக்கா அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் குவித்தார் ரசல். ரசலின் அதிரடியால் எதிரணி செய்வதறியாது திண்டாடியது. 
 

click me!