அந்த பையன் திரும்ப டீமுக்கு வரணும்.. அதுதான் நல்லது!! அகார்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 11:14 AM IST
Highlights

ஹர்திக் பாண்டியா ஒன்றும் குற்றம் செய்துவிடவில்லை. அதனால் அவருக்கான தண்டனை என்ன என்றாவது சொல்ல வேண்டும். அதைவிடுத்து காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கக்கூடாது - அகார்கர்.

ஹர்திக் பாண்டியா சீக்கிரம் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜீத் அகார்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. 

கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவத்திற்கு வருந்தி பிசிசிஐ-யிடம் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். எனினும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பாண்டியாவும் ராகுலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினர். பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அணியில் ஆடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் பெரும் இழப்பு. ஏற்கனவே காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆடாமல் இருந்த பாண்டியா, ஆஸ்திரேலிய தொடரில் ஆட இருந்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. ஐபிஎல்லிலும் ஹர்திக் பாண்டியா ஆடுவார் என்பது சந்தேகம்தான். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அணியில் இடம்பெறாமல் பெரும்பாலான போட்டிகளை இழந்துவரும் ஹர்திக், உலக கோப்பையில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நல்ல ஆல்ரவுண்டரான ஹர்திக், அணியில் ஆடுவது அவசியம். ஆனால் அவரது விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாதது வருத்தமான விஷயம்தான்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக அஜித் அகார்கர் குரல் கொடுத்துள்ளார். பாண்டியா குறித்து பேசிய அகார்கர், ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஹர்திக் ஒன்றும் குற்றம் செய்துவிடவில்லை. அவருக்கான தண்டனை என்ன என்றாவது சொல்ல வேண்டும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளை இழந்துவிட்டார். அடுத்ததாக நியூசிலாந்து தொடரையும் இழக்கப்போகிறார். ஏற்கனவே இரண்டரை மாதங்களாக ஆடாமல் இருக்கிறார். எனவே ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும். அது அணிக்கும் அவசியம் என்று அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

click me!