
ஆஃப்கானிஸ்தான் ஸ்பின் பவுலர்களை கவனமாக கையாளுமாறு அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான லால்சந்த் ராஜ்பூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வலம்வருகிறார். ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி வருகிறார். ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கா ஆடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை வாரி குவித்தார்.
தற்போது, ஆஃப்கானிஸ்தான் அணி வங்க தேசத்துடன் டி20 போட்டிகளில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளிலும் ரஷீத் கானின் பங்களிப்பு அளப்பரியது. முதல் போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான், இரண்டாவது போட்டியில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இவ்வாறு தொடர்ச்சியாக ரஷீத் கான் பவுலிங்கில் மிரட்டி வருகிறார். இந்நிலையில், இந்த மாதம் 14ம் தேதி, இந்திய அணியுடன், தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆட இருக்கிறது. இந்த போட்டியில் ஆடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட 3 ஸ்பின்னர்கள் உள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள், ஸ்பின் பவுலர்களை சமாளித்து ஆடுவதில் வல்லவர்கள் என்றாலும், ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் சவாலாக இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்பூத், பெங்களூர் சின்னசாமி மைதான ஆடுகளம் பந்து நன்றாக திரும்பும் நிலையில் அமைக்கப்பட்டால் நமக்கு சிரமம்தான். ஏனென்றால் ரஷீத் கான் அபாயகரமான சுழல் பந்துவீச்சாளர். ஆஃப்கன் ஸ்பின்னர்கள், அதில் நன்றாக சாதிக்க வாய்ப்பிருக்கிறது. ரஷித்கான் பந்தை வேகமாக அடித்து ஆட முயற்சிக்கக் கூடாது. அவரது பந்துகளில் சிங்கிள்கள் மட்டுமே எடுக்க வேண்டும். அடித்து ஆட முயற்சித்தால் விக்கெட்டுகளை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.