பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பளூதூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலி ஒலிம்பிக் முகாமிலிருந்து வெளியேற்றம்!

By Rsiva kumarFirst Published Mar 16, 2024, 8:08 PM IST
Highlights

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் அச்சிந்தா ஷூலி என்ஐஎஸ் பாட்டியாலாவில் உள்ள பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து பிடிபட்ட நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் ஆயத்த முகாமிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளூதூக்குதலில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் தான் NIS பாட்டியாலாவில் உள்ள பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் அச்சிந்தா ஷூலி நுழைந்து பிடிபட்டுள்ளார். இதன் காரணமாக அவர், பாரிஸ் ஒலிம்பிக் ஆயத்த முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் என்.ஐ.எஸ். பாட்டியாலா செயல் இயக்குநர் வினீத் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்சிந்தா ஷூலி பெண்கள் விடுதிக்குள் நுழைந்தது தொடர்பான வீடியோ ஆதாரம் உள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணைக் குழுவை இந்திய விளையாட்டு ஆணையம் அமைக்கவில்லை.

மேலும் அந்த வீடியோ ஆதாரம் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் என்.ஐ.எஸ். பாட்டியாலா செயல் இயக்குநர் வினீத் குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அச்சிந்தா ஷூலீயை முகாமிலிருந்து வெளியேற்றும்படி இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பிடம் கூறியதைத் தொடர்ந்து அவர் உடனடியாக தேசிய முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பாட்டியாலாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. தற்போது, பெண்கள் குத்துச்சண்டை வீராங்கனைகள், தடகள வீரர்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் NIS இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது போன்று சம்பவத்திற்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக கூட காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரமி லால்ரின்னுங்காவிற்கு எதிராகவும் ஒழுங்கு மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தேசிய முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து இந்த மாதம் தாய்லாந்தில் நடக்க உள்ள IWF உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடருக்கு அச்சிந்தா ஷூலி பயணம் செய்ய முடியாத நிலையில் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார். ஷூலி தற்போது ஒலிம்பிக் தகுதித் தரவரிசையில் 27வது இடத்தில் உள்ளார்.

ஷூலி தாய்லாந்து செல்ல முடியாத நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு (49 கிலோ) மற்றும் காமன்வெல்த் கேம்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்த்யாராணி தேவி ஆகியோர் மட்டுமே பாரிஸ் விளையாட்டுப் போட்டிக்கான போட்டியில் உள்ளனர். இதற்காக IWF உலகக் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக இருவரும் இம்மாத இறுதியில் தாய்லாந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!