2015 உலக கோப்பை: இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம்..? வெடித்தது சர்ச்சை

First Published Jun 25, 2018, 4:40 PM IST
Highlights
umar akmal claimed that he had received an spot fixing in india pakistan league match in 2015 world cup


2015 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய தன்னை சிலர் அணுகியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் தெரிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது அனைத்து காலக்கட்டத்திலும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. 

இந்நிலையில், உமர் அக்மல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக கோப்பை தொடரில் ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. 2007 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவில்லை. மற்றபடி 2003ல் லீக்கிலும் 2011 உலக கோப்பையில் அரையிறுதியிலும் 2015 உலக கோப்பை லீக் ஆகியவற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதற்கு முன் நடந்த உலக கோப்பைகளிலும் பலமுறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ளன. ஆனால் உலக கோப்பை தொடரில் ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. 

2015 உலக கோப்பை லீக் போட்டி ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் தன்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய சிலர் அணுகியதாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதை தெரிவித்தார். அந்த பேட்டியில் பேசிய உமர் அக்மல், இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியின் போதும் சிலர் என்னை சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 

2015 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் என்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய சொல்லி சிலர் அணுகினார்கள். அப்போது இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டுவிடுமாறு என்னிடம் கூறினார்கள். அதற்காக 2 லட்சம் அமெரிக்க டாலர் தருவதாக கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்தேன் என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பான விசாரணைக்கு வரும் 27ம் தேதி நேரில் வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

உமர் அக்மல் கூறிய அந்த குறிப்பிட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 
 

click me!