இரட்டை சதத்தை நெருங்கும் ஜாக் க்ராவ்லி.. சதத்தை நோக்கி பட்லர்..! வலுவான நிலையில் இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Aug 22, 2020, 2:39 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களம் கண்ட இந்த போட்டி, இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் 22 வயதே ஆன இளம் வீரரான ஜாக் க்ராவ்லி, களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி சதமடித்தார். அவர் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அவருடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய பட்லர் சதத்தை நெருங்கிவிட்டார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். ரோரி பர்ன்ஸை 5வது ஓவரிலேயே வெறும்  6 ரன்களுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீழ்த்தினார். இதையடுத்து டோமினிக் சிப்ளியுடன் ஜோடி சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஜாக் க்ராவ்லி களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்ய தொடங்கினார். 

ஒருமுனையில் ஜாக் கிராவ்லி சிறப்பாக ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்துகொண்டிருந்த நிலையில், மறுமுனையில் சிப்ளி 22 ரன்களிலும் கேப்டன் ரூட் 29 ரன்களிலும் ஓலி போப் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட்டை நசீம் ஷா வீழ்த்த, சிப்ளி மற்றும் போப் ஆகிய இருவரையும் யாசிர் ஷா வீழ்த்தினார். 

விக்கெட்டுகள் விழுந்தாலும், ஜாக் க்ராவ்லி கொஞ்சம் கூட அசராமல், பாகிஸ்தானின் ஃபாஸ்ட் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். யாசிர் ஷாவின் ரிஸ்ட் ஸ்பின்னையும் திறம்பட எதிர்கொண்டு ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு க்ராவ்லியுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி, பார்ட்னர்ஷிப் அமைத்தார். பட்லர் களத்தில் நிலைத்து நிற்க, க்ராவ்லி சிறப்பாக ஆடி சர்வதேச டெஸ்ட் கெரியரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு வெறும் 170 பந்துகளே எடுத்துக்கொண்டார் க்ராவ்லி. 

சதமடித்ததும் தனது கடமை முடிந்தது என்ற எண்ணம் இல்லாமல், அதன்பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடிவருகிறார் க்ராவ்லி. ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கிய பட்லர், களத்தில் செட்டில் ஆனபின்னர், தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். யாசிர் ஷாவின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை விளாசினார்.  அரைசதம் கடந்த அவர், அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 

க்ராவ்லி - பட்லர் ரொம்ப ஓவராக தடுப்பாட்டம் ஆடாமல் சீரான வேகத்தில் ஸ்கோர் செய்ததால் முதல் நாள் ஆட்ட முடிவில் 332 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. க்ராவ்லி இரட்டை சதத்தை நோக்கி பயணிக்க, பட்லர் சதத்தை நெருங்கிவிட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில், க்ராவ்லி 269 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 171 ரன்களையும், பட்லர் 148 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களையும் குவித்து களத்தில் உள்ளனர். க்ராவ்லி இரட்டை சதத்தையும் பட்லர் சதத்தையும் நெருங்குவதால் இன்றைய ஆட்டம் செமயாக இருக்கும். 
 

click me!