வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடும் தோனி - ரெய்னா..?

By karthikeyan VFirst Published Aug 21, 2020, 10:51 PM IST
Highlights

தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரரும் தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் அவரது ஆஸ்தான வீரருமான ரெய்னா ஆகிய இருவரும் கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும், இருவரும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆடுவார்கள்.  ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கிறார்கள். 

இந்நிலையில், அவர்கள் இருவரையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெறாத வீரர்கள்(இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் கூட) வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆகாஷ் சோப்ரா விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி தேர்விற்கு தங்களது பெயர்களை தோனியும் ரெய்னாவும் முன்வைக்காத நிலையில், அவர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. வீரர்கள் காயமடைந்துவிட்டால், இந்திய அணிக்காக ஆடமுடியாமல் போய்விடும் என்பதால், வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஆனால் பொருளாதார ரீதியாக வீரர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து பிசிசிஐ நன்றாக கவனித்துக்கொள்கிறது.

தோனியும் ரெய்னாவும் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கலாம். தோனியும் ரெய்னாவும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் நினைத்து பாருங்கள். தோனி கூட இனிமேல் ஆட விரும்பமாட்டார். ஆனால் ரெய்னாவிற்கு 33 வயதுதான். அவர் இன்னும் சில ஆண்டுகள் ஆடலாம். அதனால் அவருக்கு கண்டிப்பாக பிசிசிஐ அனுமதியளிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், கடந்த கனடா பிரீமியர் லீக் தொடரில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
 

click me!