பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லெஜண்ட் பேட்ஸ்மேன் நியமனம்..! இனிமேல் பாக்., அணிக்கு ஏறுமுகம் தான்

By karthikeyan VFirst Published Jun 11, 2020, 3:01 PM IST
Highlights

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

நொடிந்து போயுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்பெற செய்து, மீண்டும் சிறந்த அணியாக உருவாக்கும் முனைப்பில், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 

முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான மிஸ்பா உல் ஹக்கை, தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மிஸ்பா பொறுப்பேற்றதுமே, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஃபிட்னெஸை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் இருக்கிறார். 

பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என அந்தந்த துறைகளில் தலைசிறந்த வீரர்களை அணியின் பயிற்சியாளராக நியமிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்தியுள்ளது. வக்கார் யூனிஸ் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கானியும் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முஷ்டாக் அகமதுவையும் நியமித்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது மிகச்சிறந்த பேட்டிங்கால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன், பாகிஸ்தான் அணிக்கு டி20 உலக கோப்பையையும் வென்று கொடுத்தவர் யூனிஸ் கான். இங்கிலாந்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட தேவையான அனைத்து ஆலோசனைகளையும் யூனிஸ் கானால் வழங்க முடியும். இங்கிலாந்தில் அவரது ஆலோசனைகள் பாகிஸ்தான் வீரர்களை மேம்படுத்தும் என்பதால் அவர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,099 ரன்கள் அடித்துள்ள யூனிஸ் கானின் டெஸ்ட் சராசரி 52.06. 265 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7249 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யூனிஸ் கான். 

2009ல் பாகிஸ்தான் அணிக்கு டி20 உலக கோப்பையை வென்றுகொடுத்த ஆறே மாதத்தில் தன்னை அணியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஓரங்கட்டியது குறித்து அண்மையில் யூனிஸ் கான் மிகவும் வேதனையுடன் பேசியிருந்தார். ”உண்மையை பேசுபவர்களை இந்த உலகம் எப்போதுமே பைத்தியக்காரனாகத்தான் பார்க்கும். நாட்டிற்காக உண்மையாகவும் அர்ப்பணிப்புணர்வுடனும் இல்லாத சில வீரர்களை சுட்டிக்காட்டியதுதான் எனது தவறு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நிரந்தரமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணிக்கு இனிமேல் ஏறுமுகம் தான். 
 

click me!