ஆல்டைம் இந்தியா லெவனில் மெயின் தலைகளை புறக்கணித்த முன்னாள் வீரர்..! கேள்வியெழுப்பிய ஹர்பஜனுக்கு செம பதிலடி

By karthikeyan VFirst Published Jun 11, 2020, 1:48 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் இந்தியா லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஆல்டைம் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், அண்மையில் உலக ஒருநாள் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், ஆல்டைம் இந்தியா ஒருநாள் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் இந்தியா லெவனின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த ஜோடி, சச்சின் - கங்குலி ஜோடி தான். சர்வதேச அளவில் வெற்றிகரமான தொடக்க ஜோடி சச்சின் - கங்குலி. அவர்கள் இருவரும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 8227 ரன்களை குவித்துள்ளனர். எனவே இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க ஜோடியை, தனது ஆல்டைம் லெவனின் தொடக்க ஜோடியாக தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். 

மூன்றாம் வரிசையில் ரோஹித் சர்மாவையும் நான்காம் வரிசையில் விராட் கோலியையும் ஐந்தாம் வரிசையில் யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்து, அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார். ஆல்ரவுண்டராக முன்னாள் உலக கோப்பை வின்னிங் கேப்டன் கபில் தேவை தேர்வு செய்துள்ளார். கபில் தேவ் 1983ல் இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு, 2011ல் தோனி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்தார். கபில் தேவ் - தோனி இருவரையும் தனது ஆல்டைம் லெவனில் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், கபில் தேவை புறக்கணித்து தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

ஜடேஜா/ஹர்பஜன் இருவரில் ஒருவரை திடமாக தேர்வு செய்யவில்லை. இருவரில் ஒருவர் என்று தெரிவித்துள்ள வாசிம் ஜாஃபர், மற்றொரு ஸ்பின்னராக அனில் கும்ப்ளேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஜாகீர் கான் மற்றும் பும்ராவையும் தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபரின் ஆல்டைம் இந்தியா ஒடிஐ லெவன்:

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா/ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், பும்ரா.

ஆல்டைம் ஒருநாள் இந்திய அணியில், அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை புறக்கணித்தது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கேள்வியெழுப்பினார். சேவாக் இல்லையா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வாசிம் ஜாஃபர், இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட ஆல்டைம் அணி தேர்வு. அதுமட்டுமல்லாமல், சேவாக்கை சேர்த்தால் யாரை நீக்குவது..? மிகவும் கடினமான தேர்வு என்று தெரிவித்துள்ளார். 

சேவாக் அதிரடியான தொடக்க வீரர். இந்திய கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தின் முகத்தை மாற்றியவர். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பவுலரின் மனநிலையை சிதைக்கும் வித்தைக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து இரட்டை சதம் அடித்த வீரர் சேவாக் தான். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக 2 முச்சதங்களை விளாசியவர். களத்தில் நிலைக்க நேரமெல்லாம் எடுத்துக்கொள்ளாமல், முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி, எதிரணியை சிதைக்கக்கூடியவர். ஆனால், வாசிம் ஜாஃபர், கூறியதுபோல, சச்சின் - கங்குலி, ரோஹித் ஆகிய மூவரில் ஒருவரை நீக்கினால் தான் சேவாக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்களும் மிகச்சிறந்த வீரர்கள் என்பதால் வாசிம் ஜாஃபரால் சேவாக்கை தேர்வு செய்ய முடியவில்லை.

இந்திய கிரிக்கெட்டிற்கு சுயநலமற்ற, மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள ராகுல் டிராவிட்டையும் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்யவில்லை.
 

click me!