ஊழல்வாதிகளிடம் இருந்து ஒதுங்கி இருங்க.. அசாருதீனுக்கு பதிலடி கொடுத்து எச்சரிக்கை விடுத்த ராயுடு.. நீங்க சொல்றதுலாம் சரிதான்.. ஆனால் சொன்ன விதம் தவறு

By karthikeyan VFirst Published Nov 26, 2019, 5:48 PM IST
Highlights

அம்பாதி ராயுடுவுக்கும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் அசாருதீனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. 
 

உலக கோப்பைக்கு முன் நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலத்தில் அம்பாதி ராயுடுதான் அந்த வரிசைக்கு உறுதி செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று விதத்திலும் பங்களிப்பு செய்வார். அவர் 3டி(டைமன்ஷனல்) வீரர் என்பதால் அவரை எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ராயுடுவின் தேர்வை நியாயப்படுத்தியிருந்தார். ஆனால் ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட விரக்தியில் இருந்த ராயுடு, தேர்வுக்குழுவையும் இந்திய அணி தேர்வையும் கிண்டல் செய்யும் விதமாக, உலக கோப்பையை காண 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாக டுவீட் செய்திருந்தார். 

தேர்வுக்குழுவையும் இந்திய அணியின் தேர்வையும் கிண்டலடித்ததால், அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே இரண்டு முறை ராயுடுவை எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். தான் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாக கருதிய ராயுடு, அந்த விரக்தியில் ஓய்வு அறிவித்தார். பின்னர் ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி, ஹைதராபாத் அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் ஆடிவருகிறார்.

இந்நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிலவும் ஊழல் குறித்து தெலுங்கானா அமைச்சர் கேடி.ராமாராவிடம் டுவிட்டரில் புகார் அளித்திருந்தார். அதில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளது. பணம் மற்றும் ஊழல்வாதிகளால் கிரிக்கெட் சங்கம் நிரம்பியுள்ளது. இப்படி இருந்தால் ஹைதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டுவிட்டரில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மேலும், ஹைதராபாத் அணியில் அரசியல் அதிகமுள்ளதாகவும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அதனால், தான் ரஞ்சி டிராபியில் ஆட விரும்பவில்லை எனவும் ராயுடு தெரிவித்திருந்தார். 

ராயுடுவின் புகார் குறித்து அசாருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அசாருதீன், ராயுடு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர் என்று நறுக்குனு பதிலளித்துவிட்டார். ராயுடு விரக்தியில் இருப்பதால், இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார் என்கிற ரீதியாக அசாருதீன் தெரிவித்துவிட்டார். 

அசாருதீனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை டேக் செய்து டுவீட் செய்த ராயுடு, இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். தனிப்பட்ட மோதல்களுக்கு அப்பாற்பட்டு, பிரச்னை தான் முக்கியம். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். எனவே அந்த ஊழல்வாதிகளிடமிருந்து நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு எதிர்கால கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் என்று ராயுடு பதிவிட்டுள்ளார். 

ராயுடுவின் புகாரும் டுவீட்டும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் இருக்குமாயின், அதுகுறித்து அமைச்சரை நேரடியாக சந்தித்து ராயுடு புகார் அளித்திருக்கலாம். அதைவிடுத்து டுவீட்டில் டேக் செய்து புகார் அளிப்பது சரியான அணுகுமுறை அல்ல. இதன்மூலம் தனது கருத்தை பிரபலப்படுத்தி, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதே ராயுடுவின் பிரதான நோக்கமாக தெரிகிறது. ஏனெனில் உண்மையாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழலை கலைவதும் ஹைதராபாத் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை காப்பதுமே நோக்கமாக இருந்திருந்தால், ராயுடு அமைச்சரை நேரில் சந்தித்து அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கலாம். 
 

click me!