தலையில் செம அடி.. அறிமுக போட்டியிலேயே ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்..! பரிதாப சம்பவம்

By karthikeyan VFirst Published Nov 21, 2021, 4:24 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அறிமுக வீரர் ஜெரெமி சொலஸனோ ஃபீல்டிங் செய்யும்போது தலையில் பலத்த அடிபட்டு, ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டார்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது. அதனால் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் ஆடிவருகின்றன.

இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே மற்றும் நிசாங்கா ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 139 ரன்களை குவித்து கொடுத்தனர். அரைசதம் அடித்த நிசாங்கா, 56 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஒஷாடா ஃபெர்னாண்டோ மற்றும் சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகிய இருவரும் தலா 3 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் கருணரத்னே சதமடித்தார். கருணரத்னேவுடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்துவருகிறார்.

இந்த போட்டியில், 24வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் ஜெரெமி சொலஸனோவிற்கு தலையில் பலத்த அடிபட்டது. ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஹெல்மெட் அணிந்து ஃபீல்டிங் செய்தார் ஜெரெமி. ரோஸ்டான் சேஸ் வீசிய 24வது ஓவரின் 4வது பந்தை கருணரத்னே ஓங்கி அடிக்க, பந்து ஜெரெமியின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக ஸ்ட்ரெச்சர் எடுத்துவரப்பட்டு, அதில் ஜெரெமி தூக்கி செல்லப்பட்டார். அறிமுக போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் 26 வயது இளம் வீரரான ஜெரெமி ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மாற்று ஃபீல்டர் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் அவரது உடல்நிலை குறித்து அப்டேட் செய்யப்படும்.
 

click me!