கோலியோட மோசமான கேப்டன்சி தான் இந்த நிலைமைக்கு காரணம்.. முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Feb 23, 2020, 3:22 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடிவருகிறது. வெலிங்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. முதலில் பேட்டிங் ஆடுவது அங்கு கடும் சவாலாக இருந்தது. அதனால் புஜாரா, கோலி ஆகிய அனுபவம் வாய்ந்த சிறந்த பேட்ஸ்மேன்களே விரைவில் ஆட்டமிழந்தனர். ரஹானே அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். டெய்லர் 44 ரன்களும் வில்லியம்சன் 89 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினர் இந்திய பவுலர்கள். அதன்பின்னர் டிம் சௌதியையும் 6 ரன்னில் இஷாந்த் சர்மா அனுப்பிவைத்தார். 

இதையடுத்து 225 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் இந்திய அணி கோட்டைவிட்டது. 8வது விக்கெட்டுக்கு டி கிராண்ட் ஹோமுடன் ஜோடி சேர்ந்த கைல் ஜாமிசன், சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக பேட்டிங் ஆடிய அவர், 45 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து 9வது விக்கெட்டாக டி கிராண்ட் ஹோம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசி வீரராக களத்திற்கு வந்த டிரெண்ட் போல்ட் கூட சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடிய போல்ட் வெறும் 24 பந்தில் 38 ரன்களை நியூசிலாந்து அணிக்கு சேர்த்து கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்தது. ஜாமிசன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய 2 பவுலர்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது இந்திய அணி. அதன்விளைவாக, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. 

183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை அடித்துள்ளது. ரஹானேவும் ஹனுமா விஹாரியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி நியூசிலாந்தைவிட இன்னும் 39 ரன்கள் பின் தங்கியுள்ளது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், இந்த 39 ரன்களை அடித்து, அதற்கு மேல் பெரிய ஸ்கோரை அடித்து, சவாலான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இந்திய அணி இருக்கும் நிலையில், இது சாத்தியமல்ல. எனவே தோல்வியை தவிர்க்கத்தான் போராட வேண்டும். 

இப்படியொரு இக்கட்டான நிலைக்கு இந்திய அணி சென்றதற்கு, கேப்டன் கோலியின் கேப்டன்சி குறைபாடு தான் காரணம் என்று விவிஎஸ் லட்சுமணன் சாடியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன், டிம் சௌதியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, நியூசிலாந்தை இறுக்கி பிடித்து, 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறவிடாமல் சுருட்டியிருக்கலாம். ஆனால் இந்திய அணி நியூசிலாந்தை விட்டுவிட்டது. காலின் டி கிராண்ட் ஹோமும் ஜாமிசனும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடியதால் தான் அந்த அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பந்துவீசாமல், டிஃபென்சிவ் மனநிலையில் பந்துவீசியது. விராட் கோலியின் இந்த அணுகுமுறை தவறானது. குறிப்பாக இரண்டாவது புதிய பந்து கையில் இருக்கும்போது, அட்டாக் செய்து விக்கெட்டை வீழ்த்தத்தான் நினைத்திருக்க வேண்டும். 

Also Read - பக்காவா பிளான் பண்ணி பிரித்வி ஷாவை தூக்கிய டிரெண்ட் போல்ட்.. நியூசி விரித்த வலையில் நினைத்த மாதிரியே சிக்கிய ஷா

புதிய பந்து கையில் இருக்கும்போது, விராட் கோலியின் ஃபீல்டிங் செட்டப் உத்தி மோசமாக இருந்தது. வெளிநாடுகளில் ஆடும்போது, புதிய பந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 3 தரமான ஃபாஸ்ட் பவுலர்களை அணியில் வைத்துக்கொண்டு, டெயிலெண்டர்களுக்கு, அவர்களை பந்துவீச வைக்காமல், ஸ்பின்னர் அஷ்வினை வீசவைத்திருக்கக்கூடாது. விராட் கோலி ட்ரிக்கை தவறவிட்டுவிட்டார். அதனால்தான் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது என்று கோலியின் கேப்டன்சியை லட்சுமணன் விமர்சித்துள்ளார். 

click me!