இக்கட்டான சூழலில் இலங்கை அணியை கரைசேர்த்த ஹசரங்கா.. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி

By karthikeyan VFirst Published Feb 23, 2020, 12:46 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப்பின் சதம் மற்றும் கடைசி நேரத்தில் கீமோ பால் மற்றும் ஹைடன் வால்ஷின் அதிரடியால் 289 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க மற்றும் நட்சத்திர வீரரான ஷாய் ஹோப், நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடி சதமடித்தார். 

ஒருமுனையில் ஆம்பிரிஷ், டேரன் பிராவோ, ரோஸ்டான் சேஸ், பூரான் என விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்தார் ஹோப். ஆம்பிரிஷ் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் டேரன் பிராவோ மற்றும் சேஸ் ஆகிய இருவரும் ஹோப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சதமடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ஹோப், டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோரை முடிந்தவரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் அதை செய்யாமல் 46வது ஓவரில் 115 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டெத் ஓவர்களில் ஹோப் விட்டுச்சென்ற பணியை கீமோ பாலும் வால்ஷும் சேர்ந்து சிறப்பாக செய்தனர். இருவரும் அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இதையடுத்து 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

290 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கேப்டன் கருணரத்னே ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அடித்து ஆடி, இலங்கை அணிக்கு மிக அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

தொடக்க வீரர்கள் இருவருமே அரைசதம் அடித்தனர். ஃபெர்னாண்டோ 50 ரன்களிலும் கருணரத்னே 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 20 ஓவரில் 121 ரன்கள். எனவே சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் அதன்பின்னர் குசான் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, குசால் பெரேரா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இவர்கள் படுமோசமாக ஆடவில்லையென்றாலும், அனைவருமே ஓரளவிற்கு ஆடி ஸ்கோர் செய்தனர். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடி கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் பொறுப்பை ஒருவர் கூட சரியாக செய்யவில்லை. 

குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, திசாரா பெரேரா ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக ஆடி 22 பந்தில் 32 ரன்கள் அடித்த திசாரா பெரேரா 43வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இலங்கை அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. திசாரா அவுட்டாகும்போது 42.4 ஓவரில் 253 ரன்களை குவித்திருந்தது இலங்கை அணி. எனவே அதன்பின்னர் எஞ்சிய ஸ்கோரை அடிப்பது எளிது. ஆனால் 7 விக்கெட்டுகள் போய்விட்டன. 

அதன்பின்னர் அந்த நெருக்கடியான சூழலை திறம்பட கையாண்டு, மறுமுனையில் பவுலர்களை நின்றபோதிலும், இலக்கை துணிச்சலாக விரட்டிய ஹசரங்கா, மறுமுனையில் எஞ்சிய 2 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டபோதிலும், கடைசி வரை களத்தில் நின்று இலங்கை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் பணியை செவ்வனே செய்து முடித்தார். ஹசரங்காவின் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரின் முதல் பந்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஹசரங்கா 39 பந்தில் 42 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Also Read - இந்தியாவின் வெற்றிகரமான ஃபாஸ்ட் பவுலர்.. இஷாந்த் சர்மா அபார சாதனை.. வெளிநாடுகளில் கொடி நாட்டிய இஷாந்த்

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

click me!