இந்தியாவின் வெற்றிகரமான ஃபாஸ்ட் பவுலர்.. இஷாந்த் சர்மா அபார சாதனை.. வெளிநாடுகளில் கொடி நாட்டிய இஷாந்த்

By karthikeyan VFirst Published Feb 23, 2020, 10:39 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். 
 

காயத்திலிருந்து மீண்டு வந்த இஷாந்த் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்துவந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டுவந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்திய டெஸ்ட் அணியில் நீண்டகாலம் மற்றும் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் இஷாந்த் சர்மா. 100 டெஸ்ட் போட்டிகளை நெருங்கிவிட்டார் இஷாந்த் சர்மா. இந்திய அணிக்காக அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இஷாந்த் சர்மா.

இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலராக திகழும் இஷாந்த் சர்மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின்னர் ஆடும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வெலிங்டனில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரையுமே இஷாந்த் சர்மா தான் வீழ்த்தினார். அவர்கள் தவிர ரோஸ் டெய்லர், டிம் சௌதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூவரையும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதையடுத்து 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம், SENA(தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து - நியூசிலாந்து - ஆஸ்திரேலியா) நாடுகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். 

இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து - நியூசிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் 120 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானின் சாதனையை இஷாந்த் சர்மா முறியடித்துள்ளார். 117 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் கபில் தேவ் மூன்றாமிடத்திலும் 89 விக்கெட்டுகளுடன் ஸ்ரீநாத் நான்காமிடத்திலும் 87 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி ஐந்தாமிடத்திலும் உள்ளனர். 
 

click me!