டார்கெட்டே வெறும் 149.. ஆனால் அதுலயும் சதமடித்து அசத்திய காம்ரான் அக்மல்.. வெறித்தனமான பேட்டிங்

By karthikeyan VFirst Published Feb 23, 2020, 11:13 AM IST
Highlights

காம்ரான் அக்மலின் அதிரடியான சதத்தால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெஷாவர் ஸால்மி அணி. 
 

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் பெஷாவர் ஸால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிளாடியேட்டர்ஸ் அணி, ஜேசன் ராய் மற்றும் சர்ஃபராஸ் அகமதுவின் பொறுப்பான மற்றும் அதிரடியான பேடிட்ங்கால் 148 ரன்கள் அடித்தது. அவர்கள் இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர் ஷேன் வாட்சன் 10 பந்தில் வெறும் 8 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர்  களத்திற்கு வந்த அஹமது ஷேஷாத் 12 பந்தில் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சர்ஃபராஸ் அகமது அதிரடியாக ஆடி 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அவர் அவுட்டானதும் ஸ்கோர் வேகம் குறைந்தது. ஒருமுனையில் ஜேசன் ராய் மட்டும் நிலைத்து நிற்க மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 

ஆசாம் கான் 9 பந்தில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்தார். இவ்வாறு அனைத்து வீரர்களுமே சரியாக ஆடாததுடன் பந்துகளையும் வீணடித்துவிட்டு சென்றனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ராய், கடைசி வரை களத்தில் நின்று கிளாடியேட்டர்ஸ் அணி 148 ரன்களை அடிக்க உதவினார். ராய் 57 பந்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்களை குவித்தார். 

இதையடுத்து 149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெஷாவர் அணியின் தொடக்க வீரரும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரருமான காம்ரான் அக்மல், அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். காம்ரான் அக்மல் அடித்து ஆடியதால் மறுமுனையில் நின்ற வீரர் பெரிதாக எதுவுமே செய்ய தேவைப்படவில்லை. அதிரடியாக ஆடிய அக்மல் சதம் விளாசினார். 55 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி பெஷாவர் அணி வெற்றி பெற்றது. இலக்கே 149 ரன்கள் தான். அதில் 101 ரன்களை குவித்தார் காம்ரான் அக்மல். ஆட்டநாயகனும் அவரே.

click me!