IPL 2021 ரெய்னா எவ்வளவு சொதப்புனாலும் தோனி அவரை மட்டும் நீக்கமாட்டார்.. இதுதான் காரணம்..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 1, 2021, 5:56 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னா சரியாக ஆடவில்லை என்பது தோனிக்கும் தெரியும்; ஆனாலும் ரெய்னாவை தோனி அணியிலிருந்து நீக்கமாட்டார் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
 

ஐபிஎல்லில் 3 முறை கோப்பையை வென்று சாம்பியன் அணியாக திகழும் சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த சீசனில் மீண்டும் பழைய சிஎஸ்கேவை போல் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய வீரர்கள் முக்கியமான காரணம். ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணிக்காக ஆடும் இந்த வீரர்கள், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளாக திகழ்கின்றனர்.

கடந்த சீசனில் ரெய்னா ஆடாததால் தான், சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாமல் போய்விட்டது என்று ரசிகர்கள் பலர் வேதனைப்பட்டனர். ஆனால் இந்த சீசனில் ரெய்னா ஆடியும் பிரயோஜனம் இல்லை எனுமளவிற்குத்தான் அவரது ஆட்டம் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த சீசனில் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லாமல், ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். சிஎஸ்கே அணியின் பெரிய பலமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் உள்ளனர். மொயின் அலி, ராயுடு, ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பு செய்துவருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் ரெய்னா மட்டும் திணறிவருகிறார். இந்த சீசனில் 11 போட்டிகளில் 10ல் பேட்டிங் ஆடி வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ரெய்னா சரியாக ஆடவில்லை என்பது தோனிக்கு தெரிந்தாலும், அவரை அணியிலிருந்து நீக்கமாட்டார் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், ரெய்னா சரியாக ஆடவில்லை என்பது தோனிக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு வீரரை ஆடவைக்கமாட்டார். ரெய்னா 20-30 பந்துகள் பேட்டிங் ஆடி 10-20 ரன்கள் அடித்தால் கூட, தன்னம்பிக்கை பெற்றுவிடுவார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாகூர் வரை பேட்டிங் ஆடுமளவிற்கு நல்ல பேட்டிங் டெப்த் உள்ளது. எனவே ரெய்னாவின் ஃபார்ம் குறித்து சிஎஸ்கே அணி கவலைப்பட வேண்டியதில்லை.

தோனிக்கு முன்பாக ரெய்னா இறங்குவது குறித்து சில விமர்சனங்கள் உள்ளன. ஆனால் பிளே ஆஃபிற்கு முன்பாக ரெய்னா ஸ்கோர் செய்து நம்பிக்கையை பெற்று ஃபார்முக்கு வந்தால் நல்லது என்றுதான் நினைப்பார் தோனி. சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முட்டி மோதினாலும் ஸ்கோர் செய்யமுடியாது. ஆனால் ரெய்னா தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

click me!