ரிஷப் பண்ட்டின் ஆர்வக்கோளாறால் இந்திய அணியே அசிங்கப்பட்டிருக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மானம்

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 12:13 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டியில் நூலிழையில் இந்திய அணியின் மானம் தப்பியது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. அதனால் இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாமல் போய்விட்டது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான இந்திய அணியை உருவாக்கும் பணி, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே தொடங்கிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் தெரிந்த பவுலர்களுக்கே அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

அதேபோல் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் ஆடிவருகிறார். ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்புவதால் அவர் மீது அதிக அழுத்தம் உள்ளது. 

ரிஷப் பண்ட்டே இதுவரை நான்காம் வரிசையில் இறங்கிவந்த நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில், நான்காம் வரிசைக்கு அணி நிர்வாகம் ஒரு திட்டத்தை வைத்திருந்திருக்கிறது. அது வீரர்களுக்கும் தெரியும். ஆனாலும் தவானின் விக்கெட்டுக்கு பிறகு ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே பேட்டிங் ஆட கிளம்பிய சம்பவம், செம காமெடியாகவும், வீரர்களின் புரிதலின்மையையும் காட்டும் விதமாகவும் அமைந்தது. 

10 ஓவருக்குள்ளாக இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் வர வேண்டும், 10 ஓவரை தாண்டி 2 விக்கெட்டுகள் விழுந்தால், நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் வர வேண்டும் என்பதுதான் திட்டம். இதை கோலியே போட்டிக்கு பின்னர் தெரிவித்திருந்தார். 

அப்படி பார்த்தால் ஷ்ரேயாஸ் ஐயர் தான் நான்காம் வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில், தவான் 8வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். எனவே களத்தில் இருந்த கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் தான் ஜோடி சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் களத்திற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து போட்டிக்கு பின்னர் பேசிய கோலி, ரிஷப்பிற்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இடையேயான மிஸ் கம்யூனிகேஷனால்தான் இது நடந்தது. நல்ல வேளை இருவரும் களத்திற்கு வரவில்லை. இருவருமே களத்திற்குள் வந்திருந்தால் செம காமெடியாகியிருக்கும் என்று கோலி தெரிவித்தார். 

தன்னை நிரூபித்து அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அழுத்தத்தின் காரணமாக தெளிவான மனநிலையிலேயே இல்லை என்பதற்கு இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்லாமல் கோலி சொன்னதுபோல், இருவரும் களத்திற்கு வந்திருந்தால், அது காமெடியாக இருந்திருக்காது. அணிக்கு அசிங்கமாகத்தான் இருந்திருக்கும். 
 

click me!