படுமோசமாக சொதப்பிய இந்தியா.. டி காக்கின் அதிரடியால் அசால்ட்டா அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 10:22 AM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்துவிட்டது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தலா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஷிகர் தவானும் நீண்ட நேரம் நிலைத்து பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தவான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடர் சொதப்பலால் கடும் நெருக்கடியில் இருக்கும் ரிஷப் பண்ட், இந்த போட்டியிலாவது நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால், மீண்டும் ஒருமுறை சொதப்பிவிட்டு சென்றார். தனது இயல்பான ஆட்டத்தையும் ஆடமுடியாமல், சூழலுக்கு ஏற்ப சிங்கிள் ரொடேட் செய்தும் ஆடமுடியாமல், 20 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா என யாருமே சோபிக்கவில்லை. ஜடேஜா 19 ரன்கள் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரே பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு ரன் அவுட்டானார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதை அடுத்து இந்திய அணி, 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தது. 

சிறிய மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 135 ரன்கள் என்பதெல்லாம் ஒரு டார்கெட்டே கிடையாது. அதை நிரூபிக்கும் விதமாகவே தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கும் அமைந்திருந்தது. தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக்கும் ஹென்ரிக்ஸும் இணைந்து சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். 

முதல் விக்கெட்டை இந்திய அணியால் அவ்வளவு எளிதாக வீழ்த்தமுடியவில்லை. டி காக் அடித்து ஆட, ரீஸா ஹென்ரிக்ஸ் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிதானமாக ஆடினார். ஒரு திட்டத்துடன் களமிறங்கி, அதை சிறப்பாக செயல்படுத்தினர் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர்கள். ஒருவழியாக ஹென்ரிக்ஸை 11வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். ஹென்ரிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய டி காக் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்த பவுமாவும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து 17வது ஓவரிலேயே இலக்கை எட்டிவிட்டனர். தென்னாப்பிரிக்க கேப்டன் குயிண்டன் டி காக் 52 பந்துகளில் 79 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமனடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாப்பிரிக்க பவுலர் பியூரன் ஹென்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!