இதுதான் இளம் வீரரை கையாளும் லெட்சணமா..? அணி நிர்வாகத்தை மானாவாரியா தெறிக்கவிட்ட கம்பீர்

By karthikeyan VFirst Published Sep 22, 2019, 5:47 PM IST
Highlights

இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், நியாயமான ஒரு விஷயத்திற்காக தாறுமாறாக சாடியுள்ளார். 

இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

மூன்றுவிதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட்டே முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவர் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். நெருக்கடியான சூழலிலும் சொதப்பினார், நெருக்கடி இல்லாத நிதானமாக ஆட வாய்ப்பிருந்த சூழலிலும் சொதப்பினார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக வாய்ப்புள்ள சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதனால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

ரிஷப் பண்ட்டின் அவசரமும், தவறான ஷாட் செலக்‌ஷனும் தான் அவர் சோபிக்க முடியாமல் போவதற்கு காரணமே தவிர அவர் நல்ல பேட்ஸ்மேன் தான். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் தான் அவர் செய்யும் தவறு என்பதை அறிந்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அண்மையில் ரிஷப் பண்ட் ஷாட் செலக்‌ஷனில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மோசமான ஷாட்டுகளை ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிருவேன் எனவும் பாசமாக மிரட்டியிருந்தார். 

பயமற்ற ஆட்டத்துக்கும் கவனக்குறைவான பொறுப்பற்ற ஆட்டத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை இளம் வீரர்கள் உணர வேண்டும் என்று ரிஷப் பண்ட்டிற்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அறிவுரை கூறியிருந்தார். 

இந்நிலையில், இளம் வீரரான ரிஷப் பண்ட்டை அனி நிர்வாகம் கையாளும் விதத்தை கவுதம் கம்பீர் கடுமையாக சாடியிருக்கிறார். அவர் ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில், ரிஷப் பண்ட் குறித்து எழுதியுள்ளார். 

ரிஷப் குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், தனிப்பட்ட முறையில், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இடத்திற்கு நான் சஞ்சு சாம்சனுக்குத்தான் எனது ஆதரவு. ஆனால் ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் கையாளும் விதம் சரியில்லை. பயமற்ற ஆட்டத்துக்கும் கவனக்குறைவான ஆட்டத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும், தவறான ஷாட் ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன், ரிஷப் பண்ட்டிற்கு மாற்று வீரர் தேவை என்ற கருத்துகள் எல்லாம் ரிஷப் பண்ட்டை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இது சரியான செயல்பாடுகள் அல்ல. 

இளம் வீரரை இப்படி கையாளக்கூடாது. இளம் வீரரான அவர் இப்போதுதான் அணிக்குள் வந்திருக்கிறார். அவரிடமிருந்து விவேகமான ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு. அவர் அணிக்காக ஸ்கோர் செய்ய ஆடுவதைவிட, தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காகவே ஆடவேண்டிய கட்டாயத்தில் அவரை தள்ளியுள்ளனர் என்று அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர். 
 

click me!