தெரிந்தே ரிஸ்க் எடுத்த கோலி.. தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா.. ஆனாலும் இந்த துணிச்சல் வேற டீமுக்குலாம் வராது

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 11:13 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, அது பெரிய ரிஸ்க் என்று தெரிந்தே ஒரு ரிஸ்க்கை எடுத்தார். அந்த குறிப்பிட்ட போட்டியின் வெற்றியை பெரிதாக கருத்தில் கொள்ளாமல் தொலைநோக்கு பார்வையுடன் அந்த முடிவை எடுத்ததற்காகவே கேப்டன் கோலியை பாராட்டலாம். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. அதனால் இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாமல் போய்விட்டது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான இந்திய அணியை உருவாக்கும் பணி, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே தொடங்கிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் தெரிந்த பவுலர்களுக்கே அணியில் முக்கியத்துடம் கொடுக்கப்படுகிறது. 

பேட்டிங் ஆட தெரியாத குல்தீப், சாஹல் நீக்கப்பட்டு, பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களான வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோருக்குத்தான் அணியில் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஃபாஸ்ட் பவுலிங்கிலும் பேட்டிங் தெரிந்த தீபக் சாஹருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

அதேபோல மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியில் நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டுவரும் நிலையில், அதேமாதிரியான ஒரு பரிசோதனை முயற்சிதான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் செய்யப்பட்டது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இலக்கை விரட்டுவதுதான் எளிது என்பது தெரிந்தும் கூட, முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்தார் கேப்டன் கோலி. இது, தெரிந்தே உள்ளர்த்தத்துடன் எடுக்கப்பட்ட முடிவுதான். டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங் ஆட தீர்மானிப்பதாக தெரிவித்துவிட்டு, ஏன் அந்த முடிவை எடுத்தார் என்று விளக்கமளித்தார். 

அப்போது, “இது சேஸிங் மைதானம் என்று எனக்கு தெரியும். ஐபிஎல்லில் கூட, இலக்கை விரட்டிய அணி அதிகமாக வெற்றி பெற்றிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உலக கோப்பைக்கான தயாரிப்பில் இருப்பதால் அணியை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. எங்களை நாங்களே நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்வதற்காக, முதலில் பேட்டிங் ஆடுகிறோம். இந்த போட்டியின் முடிவுதான் முக்கியம். ஆனால் எங்களுக்கு எது வசதியோ அதை செய்யவிரும்பவில்லை. அதை மீறி கஷ்டமானதை செய்து அழுத்தத்தை அபாரமாக சமாளிக்கும் வகையில், உலக கோப்பை அணியை உருவாக்குகிறோம் என்று கோலி தெரிவித்தார். 

ஏன் இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி பெங்களூருவில் எளிதாக வெல்லும் என்றால், அந்த மைதானம் சிறியது. அதனால் 200க்கு அதிகமான டார்கெட்டையும் அடித்துவிடமுடியும். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனி அதிகமாக இருக்கும் என்பதால், பவுலர்கள் பந்தை பிடிப்பது கடினம். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும் பவுலர்களுக்கு அது கடும் சவாலாக இருக்கும். பவுலர்களுக்கு இருக்கும் அந்த சவால்தான், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பலம். அது தெரிந்தும்கூட, உள்நோக்கத்துடன் தான் கோலி, முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்.

மற்ற அணிகளாக இருந்திருந்தால், பொதுவாக அந்த குறிப்பிட்ட போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டும் என்றுதான் நினைத்திருக்கும். ஆனால் கோலி அப்படி நினைக்காமல், தொலைநோக்கு பார்வையுடன் அந்த முடிவை எடுத்திருக்கிறார். நேற்றைய போட்டியில் ஜெயித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
 

click me!