ஐபிஎல்லில் 100 முறை 30+ ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில் ஐபிஎல்லிலும் சாதனைகளை படைத்துவருகிறார்.
ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்டாண்டிங் கேப்டன் சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி (59) மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ்(84) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. கோலி - டுப்ளெசிஸின் அரைசதங்களால் 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி அபாரமான சாதனைகளை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் 89வது அரைசதம் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (88) பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் கோலி. இந்த பட்டியலில் 96 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 30 ரன்களுக்கு மேல் அடிப்பதும் கணக்கிடப்படுகிறது. டி20 கிரிக்கெட் சிறிய ஃபார்மட் என்பதால் 30+ ஸ்கோரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் பஞ்சாப்புக்கு எதிராக அடித்தது விராட் கோலியின் 100வது 30+ ஸ்கோர் ஆகும். ஐபிஎல்லில் 30+ ஸ்கோர் 100 முறை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. 221 இன்னிங்ஸில் இந்த சாதனையை கோலி படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் ஷிகர் தவான்(91) 2ம் இடத்திலும், டேவிட் வார்னர் (90) 3ம் இடத்திலும், ரோஹித் சர்மா(85) 4ம் இடத்திலும், சுரேஷ் ரெய்னா(77) 5ம் இடத்திலும் உள்ளனர்.