உலக கோப்பை அணியில் ரிஷப்பை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஏன்..? மௌனம் கலைத்தார் கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published May 15, 2019, 4:16 PM IST
Highlights

டெஸ்ட் அணியிலும் ரிஷப் பண்ட் ஆடுவதால், அவர்தான் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்களும் கேம் சேஞ்சரான ரிஷப் பண்ட்டைத்தான் அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
 

உலக கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யாததற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 

உலக கோப்பைக்கான இந்திய அணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இரண்டு இடங்கள் என்றால், அது நான்காம் வரிசை வீரரும் மாற்று விக்கெட் கீப்பரும்தான். இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு அவ்வப்போது சில வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் ரிஷப் பண்ட்டிற்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

டெஸ்ட் அணியிலும் ரிஷப் பண்ட் ஆடுவதால், அவர்தான் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்களும் கேம் சேஞ்சரான ரிஷப் பண்ட்டைத்தான் அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில்கூட ரிஷப் பண்ட் தான் அணியில் இருந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் தான் அணியில் எடுக்கப்பட்டார். இது பலரை அதிர்ச்சியடைய செய்தது. 

ஆனால் தினேஷ் கார்த்திக்கின் நீண்ட நெடிய அனுபவம், விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறன், அவரது நிதானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் அணியில் எடுக்கப்பட்டார். 

தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் இறக்கப்படுவார். அதனால் மாற்று விக்கெட் கீப்பர் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதாலும் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கக்கூடிய திறன் பெற்றவர் என்ற வகையிலும் அவரை தேர்வு செய்தோம். ரிஷப் பண்ட் திறமையான வீரர் தான். ஆனால் அவருக்கு இன்னும் போதுமான நேரம் இருக்கிறது. இப்போதைக்கு இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தான் சரியான தேர்வு என்பதால் அவரை தேர்வு செய்ததாக பிரசாத் தெரிவித்திருந்தார்.

கேப்டன் கோலியின் ஏகபோக ஆதரவுடன் தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து கேப்டன் கோலி சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து மௌனம் கலைத்துள்ளார் கேப்டன் கோலி.

தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து விளக்கமளித்துள்ள கேப்டன் கோலி, நெருக்கடியான சூழல்களை நிதானமாக கையாண்டு ஆடக்கூடியவர் தினேஷ் கார்த்திக். அதுமட்டுமல்லாமல் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்தவர் தினேஷ் கார்த்திக். ஒருவேளை தோனி ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தேவை. மேலும் ஒரு நல்ல ஃபினிஷராகவும் தினேஷ் செயல்பட்டுள்ளார். இவையெல்லாம்தான் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

click me!