நான் தப்பா ஒண்ணுமே சொல்லலயே.. நீங்க தப்பா ஆக்கிட்டீங்க!! தோனி விவகாரத்தில் மீடியா மீது பாயும் குல்தீப்

By karthikeyan VFirst Published May 15, 2019, 3:40 PM IST
Highlights

தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறானதாகவே இருக்கும் என்றும் ஆனால் அதை தோனியிடம் சொல்ல முடியாது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார்.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி தற்போது பவுலிங்கில் சிறந்த அணியாக திகழ்கிறது. 

இந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ, பும்ராவுடன் சேர்ந்து இந்த ஸ்பின் ஜோடியும் முக்கிய காரணம். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்திவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் இணைந்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு குல்தீப் - சாஹல் ஜோடி முக்கிய காரணம். 

உலக கோப்பையிலும் இந்த ஜோடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் - சாஹல் சிறப்பாக செயல்படுவதற்கு நீண்ட அனுபவம் கொண்ட சீனியர் வீரர் தோனியின் அபாரமான ஆலோசனைகளும் முக்கிய காரணம். இதை அவர்களே பல முறை தெரிவித்துள்ளனர். பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவ், தான் சிறப்பாக பந்துவீசுவதற்கு தோனியின் ஆலோசனைகள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். 

அப்படியிருக்கையில், தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறானதாகவே இருக்கும் என்றும் ஆனால் அதை தோனியிடம் சொல்ல முடியாது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார். தோனியின் ஆலோசனையை என்றைக்காவது கேள்வி கேட்டதுண்டா என்ற கேள்விக்கு மேற்கண்ட பதிலை குல்தீப் தெரிவித்திருந்தார். 

தோனியின் ஆலோசனை குறித்து குல்தீப்பின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே சாஹல், தோனி, ரோஹித், கோலியின் ஆலோசனைகளால்தான் தானும் குல்தீப்பும் வெற்றிகரமான ஸ்பின்னர்களாக திகழ்வதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தனது கருத்தை சர்ச்சைக்குரிய வகையில் மீடியாக்கள் செய்தியாக்கிவிட்டதாகவும் அந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் தான் யாரைப் பற்றியும் பொருத்தமற்ற கருத்தை தான் கூறவில்லை என்றும் குல்தீப் விளக்கமளித்திருக்கிறார். 
 

click me!