ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது..! கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 18, 2021, 6:23 PM IST
Highlights

விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது அவருக்கு நல்லது என்று கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தாலும், இந்திய அணிக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்காதது அவர் மீதான விமர்சனமாக உள்ளது.

3 விதமான இந்திய அணிகளுக்கும் கேப்டன்சி செய்துகொண்டு, பேட்டிங்கிலும் சோபித்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் நன்றாக பேட்டிங் ஆடமுடியாமல் சொதப்பிவருகிறார். இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ளும் விதமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது அவருக்கு நல்லது என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு எப்படி ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லையோ, அதேபோலவே ஐபிஎல்லில் கோலி வழிநடத்திவரும் ஆர்சிபி அணிக்கும் அவர் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுத்ததில்லை. ஆர்சிபிக்கு ஒரு முறையாவது கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என்பதே, கோலிக்கு பெரும் அழுத்தமாக இருக்கிறது.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, ஐபிஎல்லை பொறுத்தமட்டில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து ஒரு கட்டத்தில் வெளியேறிவிட்டு, வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று நினைக்கிறேன். அது அவருக்கும் நல்லது. ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதன் மூலம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
 

click me!