நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்று நடந்த போட்டியில் விராட் கோலி 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 13437 ரன்கள் குவித்து 4ஆவது வீரராக சாதனை படைத்துள்ளார்.
தரம்சாலாவில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 21ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 46 ரன்கள் குவித்தார். தரம்சாலாவில் ரோகித் சர்மா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், ஒரே ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது வரையில் 53 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பார். இதே போன்று உலகக் கோப்பை போட்டிகளில் 40 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும், 10 சிக்ஸர்கள் அடித்தால் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பார்.
இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் எடுத்துள்ளார். சுப்மன் கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 27 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க அடுத்து தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பரிதாபமாக 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
புகை மண்டலமாக காட்சி தந்த தரம்சாலா - பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறிய இந்திய வீரர்கள்!
ஒரு கட்டத்தில் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 49ஆவது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மைதானத்தில் அவர் அடித்துள்ள 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் 95 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி 13437 ரன்கள் குவித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யாவின் 13430 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 354 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 311 ரன்களுடன் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
India vs New Zealand: ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை!