தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 21ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில், டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பவுலர்களைப் பொறுத்த வரையில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்க கொடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரியாக அடித்த நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேஎல் ராகுல் 27 ரன்களில் வெளியேறினார்.
புகை மண்டலமாக காட்சி தந்த தரம்சாலா - பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறிய இந்திய வீரர்கள்!
இதையடுத்து தனது முதல் உலகக் கோப்பையில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதை வரையில் கொண்டு சென்றனர். விராட் கோலி 5 ரன்களில் தனது சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். மேலும் இந்தப் போட்டியில் சதம் அடித்திருந்தால் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்திருப்பார்.
India vs New Zealand: ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை!
எனினும், கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையி ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதன் மூலமாக இந்தியா 48 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.