ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து, அந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் விராட் கோலி.
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி அபாரமாக விளையாடிவருகிறது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஜொலிக்க வேண்டுமென்றால் விராட் கோலி சிறப்பாக ஆடவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்ப விராட் கோலி மிகச்சிறப்பாக டாப் ஃபார்மில் பேட்டிங் ஆட, இந்திய அணி வெற்றிகளை குவித்துவருகிறது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த 3 போட்டிகளிலுமே விராட் கோலி அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். கோலி சரியாக பேட்டிங் ஆடாமல் வெறும் 12 ரன்னில் ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும் தோல்வியை தழுவியது.
undefined
பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் கோலி சிறப்பாக ஆடுவார். கடந்த காலங்களில் அதை பார்த்திருக்கிறோம். நல்ல பவுன்ஸாகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விராட் கோலி அடி வெளுத்து வாங்கி பெரிய ஸ்கோர்களை செய்திருக்கிறார். அதை இந்த டி20 உலக கோப்பையிலும் தொடர்ந்துவருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 82 ரன்களையும், நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்களையும் குவித்த விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 12 ரன்னில் ஆட்டமிழந்தார். நேற்று வங்கதேசத்துக்கு எதிராக அடிலெய்டில் நடந்த போட்டியில் 44 பந்தில் 64 ரன்களை குவித்தார். விராட் கோலியின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது.
டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ
இந்த டி20 உலக கோப்பையில் 4 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 220 ரன்களை குவித்து, இந்த உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். மேலும் டி20 உலக கோப்பையில் மொத்தமாக 1065 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மஹேலா ஜெயவர்தனேவின்(1016 ரன்கள்) சாதனையை முறியடித்து அந்த சாதனையை தன்வசப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவரும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் தகர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 84 இன்னிங்ஸ்களில் 3300 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் தான் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக இருந்தார். ஆஸ்திரேலியாவில் நேற்று அடித்த அரைசதத்துடன் சேர்த்து 3350 ரன்களை குவித்த விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
இவர்தான் நமது அடுத்த பும்ரா.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா மாபெரும் புகழாரம்
விராட் கோலி ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார். குறிப்பாக அடிலெய்டில் அசத்தியிருக்கிறார். தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிலெய்டில் அடித்த கோலி, அடிலெய்டில் இதுவரை 5 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 843 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.