#ENGvsIND செட் பேட்ஸ்மேனை க்ளீன் போல்டாக்கி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய ஜடேஜா..! வீடியோ

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 7:56 PM IST
Highlights

4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அருமையாக ஆடிக்கொண்டிருந்த ஹசீப் ஹமீதை க்ளீன் போல்டாக்கி, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர் சரிவை தொடங்கிவைத்தார் ஜடேஜா. 7 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.

367 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் நன்றாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 5 ரன்னில் ரன் அவுட்டானார்.

அரைசதம் அடித்த ஹசீப் ஹமீத் ஜடேஜாவின் பந்தில் கொடுத்த கேட்ச்சை மிட் ஆன் திசையில் நின்ற முகமது சிராஜ் தவறவிட்டார். ஹசீப் ஹமீதுடன் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வழக்கம்போலவே பொறுப்புடன் தெளிவாக ஆடினார். எனவே இந்திய அணி வெற்றி பெற இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், அஷ்வினை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளான அதேவேளையில், அஷ்வின் இடத்தில் ஆடிய ஜடேஜாவிற்கு விக்கெட் வீழ்த்தியாக வேண்டிய அழுத்தம் கடுமையாக இருந்தது.

இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், ஜடேஜா விக்கெட் வீழ்த்தியாக வேண்டிய நிலை இருந்தது. அந்த நெருக்கடியான மற்றும் அழுத்தமான சூழலில், ஹசீப் ஹமீதுக்கு லெக் திசையில் பந்தை குத்தி ஸ்டம்ப்பை நோக்கி அருமையாக டர்ன் செய்தார் ஜடேஜா. வலது கை பேட்ஸ்மேனான ஹசீப் ஹமீதுக்கு, அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே குத்தி, நன்றாக திரும்பி ஆஃப் ஸ்டம்ப்பை அடித்தது. இதையடுத்து நன்றாக செட்டில் ஆகியிருந்த ஹசீப் ஹமீதை 63 ரன்னில் வீழ்த்தி அனுப்பினார் ஜடேஜா.

A good ball to end an impressive innings.

Scorecard/Clips: https://t.co/Kh5KyTSOMS

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 🇮🇳 pic.twitter.com/KS68VzSIsn

— England Cricket (@englandcricket)

 

இதையடுத்து ஆலி போப்(2), ஜானி பேர்ஸ்டோ(0) ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்த, மொயின் அலியை ஜடேஜா டக் அவுட்டாக்கி அனுப்பினார். ஜோ ரூட்டை 36 ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்த, 182 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட் மட்டுமே தேவை.
 

click me!