#ENGvsIND சிராஜ் கோட்டை விட்டது கேட்ச்சையா, இல்ல மேட்ச்சையா..? ஜடேஜாவின் கையில் போட்டியில் முடிவு..!

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 6:01 PM IST
Highlights

4வது டெஸ்ட்டில் 368 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜாவின் பவுலிங்கில் ஹசீப் ஹமீத் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் கோட்டைவிட்டார். கடைசி 2 செசனில் இந்திய அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.

367 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் நன்றாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அவர் 41வது ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா வீசிய 48வது ஓவரின் 5வது பந்தில் மிட் ஆன் திசையில் ஹசீப் ஹமீத் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை முகமது சிராஜ் தவறவிட்டார். நன்கு செட்டில் ஆகியிருந்த ரோரி பர்ன்ஸ் விக்கெட் விழுந்துவிட்ட நிலையில், களத்தில் நன்கு செட்டில் ஆகியிருந்த மற்றொரு வீரரான ஹசீப் ஹமீதின் கேட்ச்சை சிராஜ் பிடித்திருந்தால், அவரும் நடையை கட்டியிருப்பார். அடுத்தடுத்து களத்திற்கு வரும் இங்கிலாந்து வீரர்களை வீழ்த்த வேண்டிய இந்திய பவுலர்களின் வேலை எளிதாகியிருக்கும். ஆனால் சிராஜ் கேட்ச்சை விட்டதால், ஹமீத் தொடர்ந்து களத்தில் நீடிக்கிறார்.

ஆனால் 3ம் வரிசையில் இறங்கிய டேவிட் மலான், 5 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ஹசீப் ஹமீத்  62 ரன்களுடனும் ஜோ ரூட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி 2 செசனில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 237 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவை.

ஹசீப் ஹமீதின் கேட்ச்சை சிராஜ் கோட்டைவிட்டது போட்டியின் முடிவில் எந்தளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிட்ச் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பதால், இந்திய அணியின் ஸ்பின்னரான ஜடேஜாவின் கையில் தான் போட்டியின் முடிவு உள்ளது. ஜடேஜா ஒன்றிரண்டு விக்கெட் வாய்ப்புகளையும் உருவாக்கினார். ஆனால் அவருக்கு இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், கடைசி 2 செசனில் அவரது பவுலிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவரது கையில் தான் போட்டி முடிவு உள்ளது.
 

click me!