நீ சொல்றத எல்லாம் கேட்க முடியாதுப்பா..! பாக்., கேப்டன் கேட்ட வீரரை தேர்வு செய்யாத செலக்‌ஷன் கமிட்டி

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 3:50 PM IST
Highlights

சீனியர் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷோயப் மாலிக்கை டி20 உலக கோப்பைக்கான அணியின் எடுக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் கருத்தை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு, ஷோயப் மாலிக்கை தேர்வு செய்யவில்லை.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஆசிஃப் அலி, அசாம் கான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, சொஹைப் மக்சூத். 

மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வாக, சீனியர் ஆல்ரவுண்டரான ஷோயப் மாலிக்கை அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம், தேர்வுக்குழுவிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால் தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் 39 வயதான மாலிக்கின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்க மறுத்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதுதான் நடந்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் எடுக்கப்படவில்லை.

1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக ஆடிவரும் ஷோயப் மாலிக் அணியின் சீனியர் வீரர் ஆவார். 39 வயதான ஷோயப் மாலிக், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மாலிக் மிகச்சிறந்த வீரர் ஆவார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை ஆடிவரும் வெகுசில வீரர்களில் மாலிக்கும் ஒருவர். 116 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவமிக்கவர் மாலிக். மாலிக்கின் அனுபவம் அணிக்கு தேவை என கருதினார் கேப்டன் பாபர் அசாம். ஆனால் தலைமை தேர்வாளர் முகமது வாசிமோ, மாலிக்கின் ஃபிட்னெஸையும் வயதையும் கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்கவில்லை.

முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடியும் கூட, சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இருவரையுமே டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 40 வயதான முகமது ஹஃபீஸ் அணியில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஷோயப் மாலிக் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
 

click me!