ரஹானேவை ஏன் இந்திய அணி பாதுகாக்குதுனு புரியல,,! அவரை தூக்கிட்டு அவங்க 2 பேருல ஒருத்தர சேர்க்கணும் - கனேரியா

By karthikeyan VFirst Published Sep 5, 2021, 10:52 PM IST
Highlights

ரஹானே ஃபார்மில் இல்லாதபோதும், அவரை இந்திய அணி ஏன் பாதுகாக்கிறது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய  அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷர்துல் தாகூரின் அதிரடி அரைசதம்(36 பந்தில் 57 ரன்கள்) மற்றும் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி 191 ரன்களை எட்டியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது. 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 466 ரன்களை குவித்து, 368 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த தொடர் முழுவதுமாகவே இந்திய அணியின் துணை கேப்டனும் சீனியர் வீரருமான அஜிங்க்யா ரஹானே ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரைசதம்(61) அடித்தார். அதைத்தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலுமே சொதப்பினார். இந்த தொடரில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் சேர்த்தே மொத்தமாக வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி 18.17 ஆகும்.

ரஹானே தொடர்ந்து திணறிவருவதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஹனுமா விஹாரி, மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களும் பென்ச்சில் உள்ளன. ஆனாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

ரஹானே அணியிலிருந்து நீக்கப்படாவிட்டாலும், ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட்டில் அவரது பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. வழக்கமாக 5ம் வரிசையில் இறங்கும் ரஹானே, இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் 6ம் வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் 2 இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் அடித்த ரஹானே, 2வது இன்னிங்ஸில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.

இந்நிலையில், ரஹானே குறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, ரஹானேவை ஏன் இந்திய அணி காப்பாற்றுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அவரை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவ் அல்லது ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும். ரஹானே ஃபாமில் இல்லை. அவர் பேட்டிங் ஆடும்போது ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்றே அவருக்கு தெரியவில்லை. ஒரு வீரர் ஃபார்மில் இல்லை என்பது தெரிந்தால், அவரை நீக்கிவிட வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!