உலக கோப்பையில் மட்டும் இந்திய அணியை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாதது ஏன்..? இமாம் உல் ஹக் லாஜிக்

By karthikeyan VFirst Published Sep 5, 2021, 10:48 PM IST
Highlights

உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம் என்று பேசிய பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக், இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாது இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகமாக இருப்பதால் அந்த அழுத்தத்தை சமாளித்து ஆடிவிடுகிறார்கள். பாகிஸ்தான் அணியில் இருக்கும் இளம் வீரர்கள் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாத காரணத்தால் தான் பாகிஸ்தான் தோல்வியை தழுவுகிறது என்று இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

click me!