
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே அடிக்க, இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது.
99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே தனது முதல் சதத்தையும் டெஸ்ட்டில் தனது 8வது சதத்தையும் பதிவு செய்தார். 127 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அருமையாக ஆடி அரைசதம் அடித்த புஜாராவும் அதே ஓவரில் 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கோலியும் ஜடேஜாவும் இணைந்து 3வது நாள் ஆட்டத்தை முடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணீ 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்திருந்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை கோலியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரஹானே டக் அவுட்டானார்.
அவர்களை தொடர்ந்து கோலியும் 44 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, 312 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட்டும் ஷர்துல் தாகூரும் பொறுப்பை உணர்ந்து கவனமாகவும், அதேவேளையில் அடித்தும் ஆடி ஸ்கோர் செய்தனர்.
முதல் இன்னிங்ஸில் 31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், இந்த இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஷர்துல் தாகூரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர். அணியின் ஸ்கோர் 412 ரன்களாக இருந்தபோது, 60 ரன்னில் ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகூர்.
இதையடுத்து ரிஷப் பண்ட்டும் அவரது அரைசதத்தை எட்டினார். ரிஷப்புடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்துள்ளார். இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.