#BANvsNZ நியூசிலாந்து அடிச்சதோ வெறும் 128 ரன்கள்.. ஆனால் வெற்றியோ 52 ரன்கள் வித்தியாசத்தில்..!

By karthikeyan VFirst Published Sep 5, 2021, 7:23 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது டி20 இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியி ஃபின் ஆலன்(15), ரவீந்திரா(20), வில் யங்(20), டி கிராண்ட் ஹோம்(0), கேப்டன் டாம் லேதம்(5) ஆகிய 5 வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 11 ஓவரில் 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸும், டாம் பிளண்டெலும் இணைந்து பொறுப்புடன் ஆடி, படுமோசமாக சுருளாமல் பார்த்துக்கொண்டனர். நிகோல்ஸ் 36 ரன்களும் பிளண்டெல் 30 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவரில் வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்தது நியூசிலாந்து அணி. 

129 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்த வங்கதேச அணி, கடைசி ஓவரில் வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் அதிகபட்ச ரன்னே முஷ்ஃபிகுர் ரஹீம் அடித்த 20 ரன் தான். ரஹீம்(20), நயீம்(13), லிட்டன் தாஸ்(15) ஆகிய மூவர் மட்டும்தான் இரட்டை இலக்கத்தையே எட்டினர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 76 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார். 2-1 என வங்கதேச அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!