பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது..? பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ்

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 6:47 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
 

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருவதை போல பாகிஸ்தானும் தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பை தொடர், பாகிஸ்தான் சொந்த மைதானங்களாக கொண்டு ஆடும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால், அந்த கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதற்கு முன்பாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் ஆடுகிறது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஆடுகிறது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 3 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. 

இதற்கிடையே, இன்று பிற்பகல் டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரங்களில் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தனர். 

அணி தேர்வில் கேப்டன் பாபர் அசாமுக்கும் தேர்வுக்குழுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது தெரியவந்தது. சீனியர் வீரர் ஷோயப் மாலிக்கை அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம் பரிந்துரைத்திருந்த நிலையில், அவரது பரிந்துரையை தேர்வுக்குழு பொருட்படுத்தவில்லை. மாலிக் அணியில் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் இதுபோன்ற கருத்து முரண்களும், பனிப்போர்களும் இருப்பது வழக்கம்தான். கருத்து முரண் வெளியே தெரியும் அளவிற்கு முக்கியமான நபர்களின் செயல்பாடுகளும் இருக்கும்.

 அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்த தகவல் வெளியானது. இவர்கள் ராஜினாமா செய்த உடனேயே, நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பயிற்சியாளர்களாக சக்லைன் முஷ்டாக்கும் அப்துல் ரசாக்கும் நியமிக்கப்பட்டனர்.

எனவே  மிஸ்பாவும் வக்காரும் பயிற்சியாளர்கள் பதவியிலிருந்து விலகுவது ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்திருக்கிறது. அதனால் தான் உடனடியாக தற்காலிக பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
 

click me!