முதல் பவுன்ஸரில் தலையில் அடி; அடுத்த பவுன்ஸரில் சிக்ஸர்..! சச்சின் vs அக்ரம் மோதலை பகிர்ந்த வெங்கடேஷ் பிரசாத்

By karthikeyan VFirst Published May 6, 2021, 4:55 PM IST
Highlights

வாசிம் அக்ரமின் அதிவேக பவுன்ஸரில் அடிவாங்கிய சச்சின் டெண்டுல்கர், அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாசி பதிலடி கொடுத்த சம்பவத்தை வெங்கடேஷ் பிரசாத் நினைவுகூர்ந்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளுமே வெற்றி வெறியுடன் ஆடும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாகவே இரு அணிகளும் ஐசிசி தொடர்களை தவிர வேறு போட்டிகளில் மோதிக்கொள்வதில்லை என்பதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பது அரிதாகிவிட்டது.

ஆனால் 1980 - 90களில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவார்கள். அந்தளவிற்கு போட்டி கடுமையாக இருக்கும்.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், அசாருதீன், ராகுல் டிராவிட், கங்குலி, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே ஆகிய சிறந்த வீரர்களும் பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் என இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அனல் பறக்கும்.

சச்சின் vs வாசிம் அக்ரம் இடையேயான போட்டி தான் அனைத்திலும் ஹைலைட். அக்ரம் பவுலிங்கில் அட்டாக் செய்வதும் அதற்கு சச்சின் பேட்டிங்கில் பதிலடி கொடுப்பதும் என போட்டி களைகட்டும். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த ஒரு தரமான சம்பவத்தை தி கிரேட் கிரிக்கெட்டருக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்.

சச்சின் vs அக்ரம் இடையேயான போட்டி குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். ஷார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் சச்சின் தான் தொடக்க வீரர். புதிய பந்தில் வாசிம் அக்ரம் வீசினார். சச்சினை அச்சுறுத்தும் விதமாக 145 கிமீ வேகத்தில் ஒரு பவுன்ஸர் வீச, அது சச்சினின் ஹெல்மெட்டை தாக்கியது. 

ஹெல்மெட்டில் முரட்டு அடி வாங்கிய சச்சின் அதற்கு ரியாக்ட் செய்யவேயில்லை. ஹெல்மெட்டை கழட்டக்கூட இல்லை. அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார். அடுத்த பந்தையும் அதே வேகத்தில் அதே மாதிரியான பவுன்ஸராக வீசினார் அக்ரம். அதை சிக்ஸருக்கு விரட்டினார் சச்சின். அந்த சிக்ஸர் அடித்தபின்னரும் எந்த உணர்வையும் சச்சின் வெளிப்படுத்தவில்லை என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

click me!